பணம் கடன் வழங்குவதிலுள்ள சட்டங்களைச் சீர்திருத்த ஏற்படுத்தப்பட்ட தொழில்நுட்பக் குழுவின் அறிக்கை மீதான கருத்துக்களை இந்திய ரிசர்வ் வங்கி வரவேற்கிறது - ஆர்பிஐ - Reserve Bank of India
பணம் கடன் வழங்குவதிலுள்ள சட்டங்களைச் சீர்திருத்த ஏற்படுத்தப்பட்ட தொழில்நுட்பக் குழுவின் அறிக்கை மீதான கருத்துக்களை இந்திய ரிசர்வ் வங்கி வரவேற்கிறது
2006-2007ஆம் ஆண்டுக்கான ஆண்டுக் கொள்கை அறிவிப்பு பத்தி 153இல், இந்திய ரிசர்வ் வங்கி, பணம் கடன் வழங்குவதிலுள்ள சட்டங்களைச் சீர்திருத்த ஒரு தொழில்நுட்பக் குழுவை நியமிப்பதைப் பற்றிச் சொல்லியிருந்தது. (அ) தற்போது நடைமுறையில் இருக்கும் பணம் கடன் வழங்கு சட்டங்களைச் சீர்திருத்துவது (ஆ) மாநிலங்கள் அவற்றை நடைமுறைப் படுத்துவதைச் சீர்திருத்துவது (இ) கிராமப்புறங்களைக் கருத்தில் கொண்டு சட்ட மற்றும் நடைமுறைகளில் விதிகள், நெறிகளைப் பரிந்துரை செய்வதற்காக இக்குழு அமைக்கப்பட்டது.
அதற்கேற்ப இந்திய ரிசர்வ் வங்கியின் சட்ட ஆலோசகர் பொறுப்பில் இருக்கும் திரு எஸ்.வி. குப்தா அவர்களைத் தலைவராகக் கொண்ட ஒரு தொழில்நுட்பக் குழு நியமிக்கப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று மாநிலங்களின் செயலாளர்களும், ரிசர்வ் வங்கியின் உயர் அதிகாரிகளும் இக்குழுவில் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றனர். மேலும் 11 மாநிலங்களிலிருந்து முக்கியமானவர்கள் அழைப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
இக்குழு, நாடெங்கிலும் பணம் கடன் வழங்கு நடவடிக்கைகளை நன்கு பரிசீலித்து, அந்த நடவடிக்கைகளில் பங்கேற்கும் பலரையும் கலந்து ஆலோசித்து, கணெக்கெடுப்பின் மூலம் அறிந்த கீழ்த்தளத்து உண்மைகளைக் கொண்டு, கடன் வழங்கும் தனி நபர்களை நிதி நிறுவனங்களோடு இணைக்க முடியுமா என்பதையும் ஆராய்ந்து பணம் கடன் வழங்கு நடவடிக்கைகளில் அமலில் உள்ள சர்வதேச பழக்கவழக்கங்களையும் கருத்தில் கொண்டு தனது அறிக்கையைத் தயாரித்தது.
இக்குழு பணம் கடன் வழங்குவதில் ஒரு முன்மாதிரி சட்டவடிவைத் தயாரித்து அளித்துள்ளது. பணம் கடன் வழங்கு நடவடிக்கைகளில் முழுமையான சட்ட வடிவம் எதுவுமில்லாத மாநில அரசுகள் இதனை ஏற்றுக்கொள்வதைப் பற்றி பரிசீலிக்கலாம். இந்தியாவிலும் உலக அளவிலும் நடைமுறையிலிருக்கும் பணம் கடன் வழங்கு நடவடிக்கைகளின் பல்வேறு சட்டங்களிலுள்ள முக்கிய கருத்துக்களை உள்ளடக்கி இந்த மாதிரி சட்ட வடிவம் அமைந்துள்ளது. இக்குழு ஏற்கனவே அமலிலிருக்கும் சட்டங்களுக்கு சில திருத்தங்களையும் பரிந்துரை செய்துள்ளது. விரைவாகவும் எளிதாகவும் அமல்படுத்த மற்றும் குறைகளைக் களைய இத்திருத்தங்கள் உதவும் என்று இக்குழு கருதுகிறது. இம்மாதிரி சட்ட வடிவு கீழே கண்ட கருத்துக்களை முன்மொழிகிறது:
- கடன் வழங்கும் தனிநபர்கள் தங்களை, எளிதான தொல்லையில்லாத ஆயின் கட்டாயமாகப் பதிவு செய்துகொள்ளும் ஒரு முறைக்கு உட்படுத்திக்கொள்ளுதல்
- எளிதாகக் குறைதீர்க்கும் முறையையும் கூடவே அமல்படுத்துதல்
- “தாம்துபாட்” விதியை (கடன் வழங்கும் தனி நபர்கள் விதிக்கும் வட்டித் தொகைக்கு ஒர் உச்ச வரம்பை நிர்ணயிப்பது) ஏற்றுக்கொள்வது
- சந்தை நிலைமைகளைக் கருத்தில் எடுத்துக் கொண்டு அவ்வப்போது வட்டி விகித உச்ச வரம்பை நிர்ணயிப்பது
முறைசார்ந்த மற்றும் முறைசாராத கடன் வழங்குபவர்களிடையே ஒரு தொடர்பை ஏற்படுத்தி, பணம் கடன் வழங்கும் தனிநபரும், அங்கீகரிக்கப்பட்ட தரம் வாய்ந்த கடன் அளிப்பவராகக் கருதப்படும் வகையில் சில பாதுகாப்பான ஏற்பாடுகளைச் செய்து, கடன் வழங்கு வழிவகைகளை இக்குழு பரவலாக்கி உள்ளது.
இக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையை ரிசர்வ் வங்கியின் இணையதளமான www.rbi.org.inஇல் பார்க்கலாம். இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் யாவும் தொழில் நுட்பக் குழு உறுப்பினர்களின் கருத்துக்களே; அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களின் கருத்துக்களாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இக்குழுவின் பரிந்துரைகளின் மேல் தங்கள் கருத்துக்களை யார் வேண்டுமானாலும் தெரிவிக்கலாம். இப்பத்திரிகை வெளியீட்டுத் தேதியிலிருந்து நான்கு வார காலத்திற்குள் திரு. G. ஸ்ரீனிவாசன், தலைமைப் பொதுமேலாளர், ஊரக திட்டம் மற்றும் கடன் துறை, இந்திய ரிசர்வ் வங்கி, மைய அலுவலகம், ஷாஹித் பகத்சிங் மார்க், மும்பை-400001 என்ற முகவரிக்கு தங்கள் கருத்துக்களை அனுப்பலாம். gsrinivasan@rbi.org.in என்ற மின் அஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்.
மண்டல இயக்குநர்
பி.ரா.ஜோசப்
பத்திரிகை வெளியீடு எண்.114 / 2007-08