இந்திய ரிசர்வ் வங்கி மீண்டும் உறுதியாகக் கூறுகிறது – போதுமான பணம் உள்ளது – பொதுமக்கள் பொறுமை காக்குமாறு வலியுறுத்துகிறது – நோட்டுகளை தேவைப்படும்போது மாற்றிக்கொள்ளவும் - ஆர்பிஐ - Reserve Bank of India
இந்திய ரிசர்வ் வங்கி மீண்டும் உறுதியாகக் கூறுகிறது –
போதுமான பணம் உள்ளது – பொதுமக்கள் பொறுமை காக்குமாறு வலியுறுத்துகிறது – நோட்டுகளை தேவைப்படும்போது மாற்றிக்கொள்ளவும்
நவம்பர் 11, 2016 இந்திய ரிசர்வ் வங்கி மீண்டும் உறுதியாகக் கூறுகிறது – இந்திய ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, நடப்பிலிருந்த ரூ.500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டதன் காரணத்தால், புதிய ரூ. 2000 மற்றும் இதர மதிப்பிலக்க நோட்டுகளை நாடெங்கிலும் விநியோகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. போதுமான அளவிற்குப் பணம் உள்ளன. நாடெங்கிலும் ரூபாய் நோட்டுகள் சென்றடைய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நவம்பர் 10, 2016 முதல் வங்கிக் கிளைகள் நோட்டுகளை மாற்றித் தரத் தொடங்கிவிட்டன. இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது போல், ஏடிஎம்-களில் உள்ள கணிப்புக் கூறுகளை மாற்றியமைக்க வங்கிகளுக்குச் சிறிது காலம் பிடிக்கலாம். ஏடிஎம்-கள் செயல்படத் தொடங்கிவிட்டால், நவம்பர் 18, 2016 வரை நாளொன்றுக்கு ஒரு அட்டைக்கு ஏடிஎம் மூலம் ரூ. 2000 வரை அதிகபட்சமாகப் பணம் எடுக்கலாம். அதன் பின்னர் ஒரு நாளைக்கு ஒரு அட்டைக்கு ரூ.4,000 வரை பணம் எடுக்கலாம். சில வங்கிகள் ஏடிஎம் கணிப்புக் கூறுகளை மாற்றியமைக்கும் பணியை முடித்துவிட்டபடியால் இன்று காலையிலிருந்தே செயல்படத் தொடங்கி முதல் கட்டமாக ரூ.2000 வரை பணமெடுக்க அனுமதித்து வருகின்றன. விலக்கப்பட்ட ரூ. 1000 மற்றும் ரூ. 500 நோட்டுகளை மாற்றிக் கொள்ள ஏறத்தாழ 50 நாட்கள் கால அவகாசம் உள்ளது. பொதுமக்கள் பொறுமையாக, அவர்கள் வசதிக்கேற்ப டிசம்பர் 30, 2016-க்குள் பழையநோட்டுகளை மாற்றிக்கொள்ளுமாறு இந்திய ரிசர்வ் வங்கி வேண்டுகோள் விடுக்கிறது. அல்பனா கில்லவாலா பத்திரிக்கை வெளியீடு: 2016–17/1182 |