கடன் அளிப்போருக்கான நேர்மையான நடைமுறை நெறிகள் – வழிகாட்டுதல்கள் - ஆர்பிஐ - Reserve Bank of India
கடன் அளிப்போருக்கான நேர்மையான நடைமுறை நெறிகள் – வழிகாட்டுதல்கள்
RBI/2006-07/280
DBOD.No.Leg.BC.65/09.07.005/2006-07 மார்ச் 6, 2007
அனைத்து பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள்
அகில இந்திய நிதி நிறுவனங்கள்
(வட்டார கிராமிய வங்கிகள் நீங்கலாக)
அன்புடையீர்,
கடன் அளிப்போருக்கான நேர்மையான
நடைமுறை நெறிகள் – வழிகாட்டுதல்கள்
கடன் அளிப்போருக்கான நேர்மையான நடைமுறைகளுக்கான நெறி பற்றிய வழிகாட்டுதல்கள் பற்றிய எங்களது 2003 மே 5 தேதியிட்ட சுற்றறிக்கை எண் DBOD.No.Leg.BC.104/09.07.005/2002-03ஐப் பார்க்கவும்.
2. மேலே குறிப்பிட்ட சுற்றறிக்கையின் பாரா 2(1)(a)இன்படி ரூ.2 லட்சத்திற்குட்பட்ட முன்னுரிமைப் பகுதி கடன்களுக்கு கடன் விண்ணப்பப் படிவங்கள் விரிவானதாக பின்வருவனவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டுமென்று நிதிநிறுவனங்கள் அறிவுறுத்தப்பட்டன. பலகட்ட பரிசீலிப்பிற்கு ஏதேனும் கட்டணம் இருந்தால் அதன் விபரம், விண்ணப்பங்கள் ஏற்கப்படாதபோது அவை திருப்பித் தரவேண்டிய கட்டணத்தொகை, கெடுவிற்கு முன்னரே கடனைத் திருப்பிக் கொடுக்கும் வசதி, பிற விஷயங்கள் போன்றவற்றை உள்ளடக்கி இருக்க வேண்டும். அப்பொழுது தான் மற்ற வங்கிகள் அளிக்கும் கடன்களோடு ஒப்பிட்டுப் பார்த்து ஒர் அர்த்தமுள்ள விபரமான முடிவை வாடிக்கையாளர் எடுக்கமுடியும்.
3. ஒளிவுமறைவின்மையைப் பெரிய அளவில் அடைவதற்கும், கிடைத்த அனுபவத்தின் வாயிலாகவும், மேலே சொன்ன அறிவுரைகள் எல்லாக் கடன்களுக்கும், அனைத்து வகைக் கடன்களுக்கும், எவ்வளவு தொகையாக இருந்தாலும் பொருந்தும் என்று தற்போது அறிவுறுத்தப்படுகிறது. வங்கிகளும் நிதி நிறுவனங்களும் தங்கள் தங்கள் இயக்குநர் குழுவின் ஒப்புதலோடு ஒளிவுமறைவில்லாக் கொள்கையை உருவாக்கிட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
4. மேலும் மேலே குறிப்பிட்ட சுற்றறிக்கை பாரா 2(1)(d)இன்படி ரூ.2 லட்சத்திற்குள் கடன் கேட்கும் சிறு கடனாளிகள் விஷயத்தில், கடன் அளிப்போர், எதனால் கடன் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன என்பதற்கான முக்கிய காரண/காரணங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் எழுத்து மூலம் அளித்திடல் வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தோம்.
5. மறுபரிசீலனை செய்ததில், அனைத்து வகை கடன் விண்ணப்பங்களிலும் எந்தவித கடன் தொகை வரம்பும் இன்றி, கடன் அட்டை விண்ணப்பங்களையும் நிராகரிக்கும்போது, வங்கிகள்/நிதி நிறுவனங்கள் எழுத்துப்பூர்வமாக நிராகரித்தலின் காரண காரியங்களைத் தெரியப்படுத்த வேண்டும்.
6. 2007 ஏப்ரல் 30 தேதிக்குள், நேர்மையான நடைமுறைகளுக்கான நெறிகளில் தேவையான மாற்றங்களை இயக்குநர் குழுவின் ஒப்புதலோடு செய்திட்டு, திருத்தியமைக்கப்பட்ட நேர்மையான நடைமுறைகளுக்கான நெறிகளை வங்கிகளும் நிதி நிறுவனங்களும் தங்கள் இணைய தளத்தில் வெளியிட்டு விளம்பரப்படுத்த வேண்டும்.
தங்கள் உண்மையுள்ள
(பிரஷான்ந்த் சரண்)
தலைமைப் பொது மேலாளர் (பொறுப்பு)