வங்கிகளுக்கு ஆலோசனை – ராபி பருவ பயிர் சாகுபடிக்குப் பணவசதி செய்து தருதல் - ஆர்பிஐ - Reserve Bank of India
வங்கிகளுக்கு ஆலோசனை – ராபி பருவ பயிர் சாகுபடிக்குப் பணவசதி செய்து தருதல்
அறிவிப்பு எண் 148 நவம்பர் 22, 2016 தலைவர் / நிர்வாக இயக்குநர் / அன்புடையீர் வங்கிகளுக்கு ஆலோசனை – ராபி பருவ பயிர் சாகுபடிக்குப் பணவசதி செய்து தருதல் ராபி சாகுபடி பருவம் ஏற்கனவே தொடங்கிவிட்டதை அறிவீர்கள். ஆகவே, இந்த சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்களின் விவசாய செயல்பாடுகளை தடையின்றி நடத்திடத் தேவையான நிதி உதவி தருவது மிக அவசியமான ஒன்றாகும். 2. இதன்பொருட்டு, விவசாயிகளுக்குப் பயிர்க்கடனாக பட்டுவாடா செய்வதற்காக, வாரத்திற்கு ரூ.10,000 கோடி வீதம் மொத்தமாக சுமார் ரூ. 35,000 கோடி ரூபாய் அளவுக்குப் பணம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்குத் தேவைப்படும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளுக்குப் பயிர்க் கடன் பட்டுவாடா செய்திட ஏதுவாக, மாவட்டக் கூட்டுறவு வங்கிகளுக்கு நபார்டு வங்கி தனது பணக்கடன் வரம்புகளில் உட்படும் சுமார் ரூ. 23,000 கோடி தொகையைக் கொடுத்து உதவிடும். 3. பெருவாரியான இத்தகு கடன்கள், விவசாயம் சார்ந்த பட்டுவாடாக்களுக்காக பணத்திலேயே தீர்வு செய்ய நேரிடும். ஆகவே, இதற்கு உதவியாக இருக்கும் பொருட்டு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகளுக்கு போதிய அளவு ரொக்கப்பணம் கிடைப்பதைக் கருவூலக் கிளைகளை உடைய வங்கிகள் உறுதிசெய்திடவேண்டும். பிராந்திய கிரமப்புற வங்கிகள் உட்பட கிராமங்களில் உள்ள அனைத்து வணிக வங்கிகளுக்கும் போதிய பணம் கிடைப்பது உறுதிசெய்யப்படவேண்டும். வேளாண் இடுபொருட்களைத் தடையின்றி வாங்கிட வசதியாக APMC-கள் உள்ள பகுதிகளில் உள்ள வங்கிக் கிளைகளுக்கும் போதிய அளவு ரொக்கப்பணம் கிடைத்திட வழிவகை செய்யப்படவேண்டும். இங்ஙனம் (P.விஜய குமார்) |