தொகுப்பு வழிகாட்டுதல்கள் – இந்திய ரிசர்வ் வங்கியின் (இயற்கைச் சீற்றங்களினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வங்கிகளின் நிவாரணம்) வழிகாட்டுதல்கள் 2017 - ஆர்பிஐ - Reserve Bank of India
தொகுப்பு வழிகாட்டுதல்கள் – இந்திய ரிசர்வ் வங்கியின் (இயற்கைச் சீற்றங்களினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வங்கிகளின் நிவாரணம்) வழிகாட்டுதல்கள் 2017
அறிக்கை எண் 55 ஜூலை 03, 2017 தலைவர் / நிர்வாக இயக்குநர் / தலைமை நிர்வாக அதிகாரி அன்புடையீர் தொகுப்பு வழிகாட்டுதல்கள் – இந்திய ரிசர்வ் வங்கியின் (இயற்கைச் சீற்றங்களினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வங்கிகளின் நிவாரணம்) வழிகாட்டுதல்கள் 2017 இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக, வங்கிகளுக்கு வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை தொகுத்து ஜூலை 01, 2016 தேதியிட்ட “தொகுப்பு வழிகாட்டுதல்கள் FIDD No. FSD. BC. 2/05.10.001/2016-17“ளில் பார்க்கவும். இந்தத் தொகுப்பு வழிகாட்டுதல்கள் இன்றைய தேதிவரை இந்தத் தலைப்பில் வழங்கப்பட்ட அனைத்து வழிகாட்டுதல்களையும் ஒருங்கிணைக்கிறது. இதில் தொகுக்கப்பட்ட சுற்றறிக்கைளின் பட்டியல் பின்னிணைப்பில் அளிக்கப்பட்டுள்ளது. பெற்றமைக்கு ஒப்புகை அளிக்கவும். இங்ஙனம் (அஜய் குமார் மிஷ்ரா) தொகுப்பு வழிகாட்டுதல்கள் – இந்திய ரிசர்வ் வங்கியின் வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் 1949-ன் பிரிவு 21 மற்றும் 35A–ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, இந்திய ரிசர்வ் வங்கி பொதுமக்கள் நலன் கருதி, இது அவசியம் மற்றும் உகந்தது என்பதில் மனநிறைவடைந்து பின்குறிப்பிடப்பட்ட உத்தரவுகளைப் பிறப்பிக்கின்றது. அத்தியாயம் – I 1.1 குறுந்தலைப்பு மற்றும் தொடக்கம் a) இந்த வழிகாட்டுதல்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் (இயற்கைச் சீற்றங்களினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வங்கிகளின் நிவாரண நடவடிக்கைகள்) உத்தரவுகள் 2017 என்று அழைக்கப்படும். b) இந்த வழிகாட்டுதல்கள், இந்திய ரிசர்வ் வங்கியின் அலுவலக இணையதளத்தில் வெளியிடப்பட்ட அன்றிலிருந்தே நடைமுறைக்கு வரும். 1.2 பொருந்தும் தன்மை இந்த வழிகாட்டுதல்களில் உள்ள கருத்துக்கள் இந்தியாவில் செயல்படுவதற்கு உரிமம் பெற்ற அனைத்துப் பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளுக்கும், சிறுநிதி வங்கிகளுக்கும் (பிராந்திய கிராமப்புற வங்கிகள் நீங்கலாக) பொருந்தும். 2.1 காலத்திற்கேற்ப அல்லது அடிக்கடி நிகழும் இயற்கைச் சீற்றங்கள், நாட்டில் ஏதோ ஒரு அல்லது பல்வேறுபட்ட பகுதிகளில் மனித வாழ்க்கைக்குப் பெரும் ஆபத்தை விளைவித்து, பொருளாதார முயற்சிகளுக்குப் பரவலான சேதத்தை ஏற்படுத்துகின்றன. இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் பேரழிவுகளை சீரமைக்க எல்லா இயக்கங்கள் மற்றும் முகவர்களின் பெருமுயற்சி தேவைப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் மற்றும் உள்ளூராட்சி அதிகாரிகள் இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பொருளாதார புனர்வாழ்விற்கு திட்டங்களைத் தீட்டுகின்றன. நாட்டின் வளர்ச்சிப் பணிகளில் சிறுநிதி வங்கிகள் உட்பட்ட வணிக வங்கிகள் பங்கேற்கவேண்டிய அவசியத்தால், இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களின் பொருளாதார நடவடிக்கைகளைப் புனரமைப்பதில், அவர்களது தீவிர ஆதரவு முக்கியமானதாகிறது. 2.2 பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணங்களை வழங்குவதற்கு தேசீயப் பேரழிவு மேலாண்மைத் திட்டத்தின் கட்டமைப்பு அடிப்படையில் இரண்டு நிதிகள் உள்ளன. அவை, தேசீயப் பேரழிவு உடன் செயல்பாட்டு நிதி (NDRF) மற்றும் மாநில பேரழிவு உடன் செயல்பாட்டு நிதி (SDRF) ஆகும். இந்தக் கட்டமைப்பு 12 வகையான இயற்கைச் சீற்றங்களை அங்கீகரிக்கிறது. அவை – புயல், வறட்சி, பூகம்பம், நெருப்பு, வெள்ளம், சுனாமி, ஆலங்கட்டி மழைப் புயல், நிலச்சரிவு, பனிச்சரிவு, மேக வெடிப்பு, பூச்சி தாக்குதல், பனிப் பொழிவு முதலியன. இந்த 12 வகைகளில், வறட்சி, ஆலங்கட்டி மழைப்புயல், பூச்சி தாக்குதல், பனிப்பொழிவு ஆகிய 4 பேரழிவுகளுக்கு விவசாய அமைச்சகம் நிர்வாக ஏற்பாடுகளுக்கான தொடர்பு மையமாகும். மற்றைய 8 வகையான பேரழிவுகளுக்கும் உள்துறை அமைச்சகம் நிர்வாக ஏற்பாடுகளுக்கான தொடர்பு மையமாகும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அவ்வப்போது இறையாண்மை அரசுகள் (மத்திய / மாநில) நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. வேளாண் இடு பொருட்களுக்கான உதவித் தொகை, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான நிதி உதவி ஆகியவையும் இவற்றில் அடங்கும். 2.3 நிவாரண நடவடிக்கைகளில், சிறுநிதி வங்கிகள் உட்பட்ட பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளின் பங்களிப்பு என்பது, ஏற்கனவே உள்ள கடன்களைத் திருப்பிச் செலுத்துவதை சீரமைத்தல் மற்றும் கடன் வாங்கியவர்களின் தேவைக்கேற்ப புதிய கடன்களை வழங்குதல் ஆகியவையாகும். வங்கிகள் சீரான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளைத் துரிதமாக எடுக்க உதவிட ஏதுவாக, இந்த வழிகாட்டுதல்கள் நான்கு அம்சங்களை உள்ளடக்கியுள்ளன. அவை – நிறுவனக் கட்டமைப்பு (அத்தியாயம்-III), நடப்பிலிருக்கும் கடன்களை மறுசீரமைத்தல் (அத்தியாயம்-IV), புதிய கடன்களை வழங்குதல் (அத்தியாயம்-V), இதர துணை நிவாரண நடவடிக்கைகள் (அத்தியாயம்-VI). அத்தியாயம் – III 3.1 இயற்கை சீற்றத்தைக் கையாள கொள்கை / செயல்முறைகளை உருவாக்குதல் இயற்கை சீற்றம் ஏற்படும் பகுதி, அதன் தீவிரம் மற்றும் நேரம் முதலியவைகளை முன்கூட்டியே தீர்மானிக்க முடியாது. ஆகையால், வங்கிகளுக்கு, அத்தகைய நிகழ்வுகளுக்கான, இயக்குநர்கள் குழு உடனடியாக ஒப்புதல் அளிக்கும்படியான, ஒரு செயல்திட்ட வரைவு அவசியமாகிறது. இதனால், தேவையான நிவாரணம் மற்றும் உதவிகள் காலவிரயமின்றி, மிகத் துரிதமாக வழங்கப்பட முடியும். மேலும், சிறு நிதி வங்கிகள் உட்பட அனைத்துப் பட்டயலிடப்பட்ட வணிக வங்கிகளின் கிளைகள், பிராந்திய / மண்டல அலுவலகங்கள், இதற்குரிய நிலையான வழிகாட்டுதல் பற்றி அறிந்திருக்கவேண்டும். மாவட்ட / மாநில அதிகாரிகள் இது குறித்த தேவையான அறிவிப்பினை செய்தபின் இந்த நிலையான அறிவுறுத்தல்கள் அமலுக்கு வரும். இந்த நிலையான அறிவுறுத்தல்கள் அனைத்து மாநில அரசாங்க அதிகாரிகளுக்கு / மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டியது மிக இன்றியமையாதது. ஏனெனில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து சம்பந்தப்பட்ட நபர்களும் அறிந்திருக்கவேண்டியது அவசியம். 3.2 வங்கியின் பிராந்திய / மண்டல மேலாளர்களின் / விருப்புரிமை அதிகாரங்கள் வங்கிகளின் பிராந்திய / மண்டல மேலாளர்களுக்குச் சில விருப்புரிமை அதிகாரங்கள் கொடுக்கப்பட வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில், மாவட்ட ஆலோசனைக்குழு/ மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுவால் முடிவு செய்யப்படும் திட்டங்களை செயல்படுத்துவதற்காக, மைய அலுவலகத்தின் ஒப்புதலை புதிதாக மீண்டும் பெறுவதற்கான அவசியம் இதனால் தவிர்க்கப்படுகிறது. அப்பகுதியில் வழங்கப்படும் நிதி உதவியின் அளவுகோலை ஏற்றுக்கொள்ளுதல், கடனின் கால அளவை நீட்டித்தல், கடனின் விளிம்புத் தொகை, பிணையம் ஆகியவற்றை நிர்ணயிக்க விருப்புரிமை அதிகாரங்கள் தேவைப்படுகின்றன. ஏற்கனவே, நிலுவையிலிருக்கும் கடனுடன், இயற்கைச் சீற்றத்தினால் சொத்துக்கள் சேதமடைந்து அல்லது இழந்து அவற்றைப் புதிதாக உருவாக்க அல்லது பழுது பார்க்க தேவைப்படும் நிதியுதவி, இரண்டையும் இணைத்து கடனாளியின் ஒட்டுமொத்தப் பொறுப்பை கருத்தில் கொண்டு, புதிய கடன் வழங்குவதற்கும் இந்த விருப்புரிமை அதிகாரம் முக்கியமானதாகும். 3.3 மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு / மாவட்ட ஆலோசனைக்குழு கூட்டம் 3.3.1 ஒரு மாநிலத்தின் பெரும்பகுதியில் இயற்கைச் சீற்றம் ஏற்பட்டால், மாநில அளவிலான வங்கியாளர்கள் கமிட்டியின் (SLBC) கூட்டத்தை முன்னின்று நடத்தும் வங்கி இதற்கான கூட்டத்திற்கு உடனடியாக ஏற்பாடு செய்யவேண்டும். இந்தக் கமிட்டி, மாநில அரசாங்கத்தின் அதிகார அமைப்புகளுடன் இணைந்து நிவாரணம் அளிக்கும்பொருட்டு, ஒரு ஒருங்கிணைந்த செயல்திட்டத்தை உருவாக்கவேண்டும். ஒருவேளை இயற்கைச் சீற்றம் மாநிலத்தின் சிறு பகுதியை அல்லது சில மாவட்டங்களில் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தியிருந்தால், உடனடியாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் மாவட்ட ஆலோசனைக் குழுவை (DCC) முன்னின்று நடத்தும் வங்கி, ஓர் கூட்டத்திற்கு உடனடியாக ஏற்பாடு செய்யவேண்டும். இந்த SLBC / DCC-க்களின் சிறப்புக் கூட்டத்தில் தகுதியான நிவாரண நடவடிக்கைகள் விரைவாக உருவாக்கப்பட்டு, அமலாக்கம் செய்வதை உறுதிப்படுத்தும் வகையில், பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலவரம் மதிப்பீடு செய்யப்படவேண்டும். 3.3.2 இயற்கைச் சீற்றங்களால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமல்படுத்தப்பட்ட நிவாரண நடவடிக்கைகள் பற்றி, சிறப்பு செயற்குழு / துணைக்குழுவின் மூலம், SLBC / DCC-யினால் (அவ்வப்போது தீர்மானிக்கப்பட்டு வார / மாதமிருமுறை) நடத்தப்படும் கூட்டங்களில், குறிப்பிட்ட காலக்கெடுக்களில் மறு ஆய்வு நடத்தப்படவேண்டும். 3.4 இயற்கைப் பேரழிவு அறிவிப்பு 3.4.1 இயற்கைச் சீற்றத்தின் பிரகடனம், (மத்திய / மாநில) அரசுகளின் இறையாண்மை அதிகாரத்தில் உள்ளது என்பது அங்கீகரிக்கப்பட்டதாகும். இயற்கைச் சீற்றத்தை அறிவிப்பதற்கும், மேலும் உறுதிமொழிகள்/சான்றிதழ்கள் அளிப்பதற்கும் எந்த சீரான நடைமுறைகளும் பின்பற்றப்படுவதில்லை என்பதை மாநில அரசாங்கத்திலிருந்து பெறப்பட்ட தகவல்கள் எடுத்துக்காட்டுகின்றன. இந்த உறுதிமொழிகள் / சான்றிதழ்கள் பல்வேறு மாநிலங்களில் அநிவாரி (Annewari), பைசாவாரி (Paisewari), கிரிதாவாரி (Giridawari) என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றன. இருப்பினும், பயிர் இழப்பின் மதிப்பீடு 33 சதவிகிதம் அல்லது அதற்கும் கூடுதலாக இருக்கவேண்டும் என்பதையே பொதுவான அளவுகோலாகக் கொண்டு, வங்கிகள் கடன் மறுசீரமைப்பு உட்பட்ட பல்வேறு நிவாரண நடவடிக்கைகளை எடுக்கும். இந்த இழப்பை மதிப்பிடுவதற்காக சில மாநிலங்கள் பயிர் இழப்பைத் தீர்மானிக்க பயிர் வெட்டு பரிசோதனைகளை மேற்கொள்கின்றன. சில மாநிலங்கள் கண்ணளவில் மதிப்பீடு / காட்சித் தோற்றத்தை வைத்து இழப்பை மதிப்பீடு செய்யும். 3.4.2 கரைபுரண்ட வெள்ளம் போன்ற கடுமையான சூழ்நிலைகளில், பயிரிடப்பட்ட, அறுவடைக்குத் தயாரான பயிர்கள் சேதமடைந்திருந்தால் மற்றும் (அல்லது நிலம் மற்றும் பிற சொத்துக்கள் பெருவாரியாகவே) பலத்த சேதத்தை சந்தித்திருந்தால், இந்த விவகாரம் மாநில அரசு / மாவட்ட அதிகாரிகளால் இதற்காக சிறப்பாகக் கூட்டப்பட்ட SLBC / DCC- கூட்டங்களில் விவாதிக்கப்படும். அங்கே சம்பந்தப்பட்ட அரசாங்க செயலர்/ மாவட்ட ஆட்சியாளர், பயிர் வெட்டு முறையில் (Annewari - பயிர் இழப்பு சதவிகிதம் எந்த பெயரிலிருந்தாலும்) மதிப்பீடு செய்யாததற்கு விளக்கம் அளித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு கண்ணளவில் மதிப்பீடு / காட்சித் தோற்றத்தை வைத்து நிவாரணம் வழங்குவதற்கு முடிவுகளை எடுப்பார்கள். 3.4.3 இவ்விரண்டு நிகழ்வுகளிலும், SLBC / DCC-க்களானது, இந்த அறிவிப்புகளை செயல்படுத்துவதற்கு முன்பு, பயிர் இழப்பின் மதிப்பீடு 33 சதவிகிதமாகவோ அதற்கு அதிகமாகவோ உள்ளது என்பதை தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும். அத்தியாயம் – IV இயற்கைச் சீற்ற நிகழ்வுகளால், மக்களின் பொருளாதார நடவடிக்கை சீர்குலைவதாலும் மற்றும் பொருளாதார சொத்துக்கள் இழப்பினாலும், கடனைத் திருப்பியளிக்கும் திறன் கடுமையாக பாதிக்கப்படும். அதனால், நடப்பிலிருக்கும் கடன்களை மறுசீரமைத்து, கடன் வசூலில் நிவாரணம் அளிப்பது என்பது அவசியமாகிறது. 4.1 விவசாயக் கடன் - குறுகியகால உற்பத்திக்கடன் (பயிர்க் கடன்) 4.1.1 இயற்கைப் பேரழிவு நடந்த சமயத்தில் தவணைக்காலம் கடந்த கடன்களைத் தவிர மற்ற குறுகிய காலக் கடன்கள் அனைத்தும் மறுசீரமைப்புக்குத் தகுதியானவை. குறுகிய காலக் கடனின் அசலும், இயற்கைச் சீற்றம் நிகழ்ந்த வருடத்திற்கான வட்டியும், நிலையான காலக் கடனாக மாற்றப்படலாம். 4.1.2 இயற்கைச் சீற்றத்தின் தீவிரத்தைப் பொறுத்து, பொருளாதாரச் சொத்துக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு, மற்றும் அதனால் விளைந்த சிக்கல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் கடனை சீரமைத்து அதைத் திருப்பிச் செலுத்தும் காலத்தை மாற்றியமைக்கலாம். இழப்பின் மதிப்பீடு 33 சதவிகிதத்திலிருந்து 50 சதவிகிதம் வரை இருக்குமானால், கடனைத் திருப்பிச்செலுத்த அனுமதிக்கப்பட்ட காலக்கெடு அதிகபட்சமாக 2 வருடங்கள் வரை (இடைநிறுத்தக் காலமான (Moratorium period) 1 வருடம் உட்பட) நீட்டிக்கப்படலாம். பயிர் இழப்பின் மதிப்பீடு 50 சதவிகிதமோ அதற்கும் அதிகமாகவோ இருந்தால் கடனைத் திருப்பிச் செலுத்த அனுமதிக்கப்பட்ட காலக்கெடு அதிகபட்சமாக 5 வருடங்கள் வரை (இடைநிறுத்தக் காலமான (Moratorium period) 1 வருடம் உட்பட) நீட்டிக்கப்படலாம். 4.1.3 எல்லா வகையான சீரமைக்கப்பட்ட கடன் கணக்குகளில், இடைநிறுத்தக் காலமான (Moratorium period) குறைந்தபட்ச ஒரு வருட காலம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. திருத்தியமைக்கப்பட்ட கடன்களில் வங்கிகள், கூடுதல் துணைப் பிணையத்தை வலியுறுத்துக்கூடாது. 4.2 விசாயக் கடன் – (நீண்டகால முதலீட்டுக் கடன்) 4.2.1 இயற்கைச் சீற்றத்தின் தன்மை மற்றும் கடனாளி கடனைத் திருப்பிசெலுத்தும் திறன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நடப்பிலிருக்கும் காலக் கடன் தவணைகள் திருத்தியமைக்கப்படவேண்டும். 4.2.1.1 இயற்கைச் சீற்றத்தினால் பயிர்கள் மட்டும் சேதமடைந்து, இதர உற்பத்தி சொத்துக்கள் சேதமடையாத நிலை – 4.2.1.2 இயற்கைச் சீற்றத்தினால் உற்பத்தி சொத்துக்கள் முழுமையாகவோ, பகுதியாகவோ சேதமடைந்து, கடனாளிக்கு புதிய கடன் தேவை ஏற்படும் நிலை - 4.2.1.3 இயற்கை சீற்றம் மேலே 4.2.1.1-ல் குறிப்பிடப்பட்டபடி நிகழ்ந்தால், வங்கிகள் இயற்கைச் சீற்றம் ஏற்பட்ட வருடத்தின் கடன் தவணைகளை சீரமைத்து, கடனின் காலத்தை ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கலாம். இந்த ஏற்பாட்டின் கீழ் காலம் தவறிய தவணைகள், சீரமைப்புக்குத் தகுதியானவையல்ல. வங்கிகள், கடனாளிகள் வட்டி செலுத்தும் காலத்தையும் கூட தள்ளிவைக்கலாம். 4.2.1.4 இயற்கை சீற்றம் மேலே 4.2.1.2-ல் குறிப்பிடப்பட்டபடி நிகழ்ந்து, கடனாளியின் சொத்துக்கள் பகுதியாகவோ, முழுமையாகவோ சேதமடைந்திருந்தால், கடன் காலத்தை நீட்டிப்பது என்பது, கடனாளியின் ஒட்டுமொத்த கடனைத் திருப்பித்தரும் சக்தியைப் பொறுத்து தீர்மானிக்கப்படும். அதாவது, பழைய காலக் கடன், சீரமைக்கப்பட்ட பயிர்க்கடன், கொடுக்கப்படவிருக்கும் புதிய பயிர் கடன் ஆகியவற்றின் ஒட்டுமொத்த பொறுப்புத் தொகையிலிருந்து, அரசு முகமைகள் அளிக்கும் தள்ளுபடி மற்றும் பயிர்க் காப்பீட்டில் கிடைக்கு இழப்பீட்டுத் தொகை ஆகியவற்றைக் கழித்தபின் உள்ள கடன் பொறுப்பினைத் திருப்பியளிக்கும் திறன் கவனத்தில் கொள்ளப்படும். இவ்வாறு மறுசீரமைக்கப்பட்ட / புதிய காலக் கடனை திருப்பிச்செலுத்தும் காலம் என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபட்டாலும், பொதுவாக இது 5 வருடத்திற்கும் அதிகமாக இல்லாமல் இருக்கவேண்டும். 4.3. பிற கடன்கள் 4.3.1 விவசாயக் கடன்கள் தவிர, விவசாயம் சார்ந்த நடவடிக்கைகளுக்கு வழங்கப்படும் கடன்கள், கிராமப்புற கைவினைஞர்கள், வணிகர்கள் / சிறு / குறு அல்லது (தீவிர சூழ்நிலையில்) நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு வழங்கப்படும் கடன்களுக்கும் பேரிடரின் தீவிரத்தைப் பொறுத்து கடன் மறுசீரமைப்பு வழங்கவேண்டுமா என்பதை SLBC / DCC குழுக்கள் பரிசீலனை செய்யவேண்டும். அத்தகைய தீர்மானம் எடுக்கப்பட்டால், அனைத்துக் கடன்களையும் திருப்பியளிக்க காலக்கெடு குறிப்பிட்ட காலத்திற்கு நீட்டிக்கப்படும்பொழுது, ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தனிப்பட்ட கடனாளிகளின் தேவைகளை மதிப்பீடு செய்து, கடன்களின் வகை, கடனாளியின் கடனை அடைக்கும் திறன், புதுக் கடனின் தேவை ஆகியவற்றைக் கணித்து அதற்கேற்ப தனித்தனியே தீர்மானம் எடுக்கவேண்டும். 4.3.2 எந்தவொரு நிறுவனத்திற்கும் அதன் சீரமைப்பிற்காக கடன் வழங்குவதற்கு முன்னதாக, அதன் புனர்மைப்புத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், அது வெற்றிபெறுவதற்கான சாத்தியக் கூறு உள்ளதா என்பதைப் பரிசீலித்து அதன் அடிப்படையிலேயே கடன் வழங்கப்படவேண்டும். இதையே முதன்மையாக வங்கி கவனத்தில் கொள்ளவேண்டும். 4.4 சொத்துகளை வகைப்படுத்துதல் மறுசீரமைக்கப்பட்ட கடன்களின் நிலைப்பாடு (சொத்துகளை வகைப்படுத்துதல்) கீழ்க்கண்டவாறு அமைந்திடும். 4.4.1 குறுகிய மற்றும் நீண்டகாலக் கடன்களில் மறுசீரமைக்கப்பட்ட பகுதிகள் நடப்பிலுள்ள கடன்களாக கருதப்படும். அவை வாராக் கடன்களாக (NPA – வருமானம் ஈட்டா சொத்துக்கள்) வகைப்படுத்தப்படமாட்டாது. இவ்வாறு மறுசீரமைக்கப்பட்ட நடப்பிலுள்ள காலக் கடன்கள் திருத்தப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளால் நிர்வகிக்கப்படுகிறது. ஆயினும், அவ்வப்போது, வங்கிகள் நெறிமுறைத் துறையின் பரிந்துரைக்கேற்ப, இத்தகு கடன்களுக்கு அதிக அளவில் காப்பு இருப்பு (provisions) வைத்திருக்கவேண்டியது அவசியமாகும். 4.4.2 மறுசீரமைக்கப்பட்ட பகுதியில் சேராத, மீதமுள்ள காலக் கடன்களின் பகுதியானது, முதன்முதலில் கடன் வழங்கப்பட்டபோது விதிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்படுத்தப்பட்டு அவற்றின் சொத்து வகை (தரநிலை) தீர்மானிக்கப்படும். அதன் விளைவாக, கடனாளி கடனைத் திருப்பியளிக்கும் விதத்தைப் பொருத்து, கடன் அளித்த வங்கி இவற்றை “தரமானவை“, “தரம் குறைந்தவை“, “சந்தேகமானவை“, “நஷ்டம்“ என வகைப்படுத்தலாம். 4.4.3 கூடுதல் நிதியுதவி ஏதேனும் அளிக்கப்பட்டிருந்தால், அவை “தரமான சொத்து” என்று கருதப்படும். கடன் வழங்கப்பட்டபோது விதிக்கப்பட்ட கட்டளைகள் மற்றும் நிபந்தனைகளைப் பொறுத்து, வருங்காலத்தில் அவை வகைப்படுத்தப்படும். 4.4.4 இயற்கை சீற்றம் நிகழ்ந்த நாளிலிருந்து 3 மாதங்களுக்குள் கடன் சீரமைப்பு முடிந்திருந்தால் மட்டுமே, அந்தக் கடன் கணக்கு இயற்கைச் சீற்றம் நிகழ்ந்த நாளில், வகைப்படுத்தப்பட்டு (சொத்து வகை) இருந்த தரநிலைக்கேற்ப, வங்கிக்கு உரிய பலன் அளிக்கப்படும். வங்கிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிப்பதில் முன்னுணர்வுடன் செயல்படுவதை உறுதி செய்யும் பொருட்டு, மேற்குறிப்பிட்ட நிபந்தனை அமல்படுத்தப்படுகிறது. ஒருவேளை இயற்கை சீற்றம் மிக அதிக அளவில் இருந்து, வங்கிகள் கடன்களை சீரமைப்பு செய்திட இந்தக் கால அவகாசம் போதாதென SLBC / DCC-க்கள் கருதினால், அது உடனடியாக தக்க காரணங்களுடன் அந்தப் பகுதிக்குரிய இந்திய ரிசர்வ் வங்கி அலுவலகத்திற்குத் தெரிவிக்கப்படவேண்டும். ஒவ்வொரு நிகழ்வின் சாதக பாதகங்களுக்கு ஏற்ப கால அவகாசம் நீட்டித்து அளிக்கப்படும். 4.4.5 இயற்கை சீற்றம் அடிக்கடி நிகழ்ந்ததன் காரணமாக ஒருமுறைக்கும் அதிகமாக சீரமைப்பு செய்யப்படும் கடன் கணக்குகள் சீரமைப்புக்குப் பின், அதே சொத்து வகை நிலையை தக்கவைத்துக்கொள்ளும். அதன்படி, ஒருதரமான சொத்து நிலையுடைய கடன், இயற்கை சீற்றத்தால் சீரமைக்கப்படும்போது, அது இரண்டாம் முறை சீரமைக்கப்பட்டதாக கருதப்படமாட்டாது. அதாவது, அதன் சொத்து வகைப்படுத்துதல் “தரமான” வகையிலிருந்தால், அது அவ்வாறே ஏற்றுக்கொள்ளப்படும். எவ்வாறாயினும், கடன் சீரமைப்புக்கான இதர கொள்கைகள் மாற்றமின்றி இவற்றிற்குப் பொருந்தும். 4.5 காப்பீடு இழப்பீட்டுத் தொகையை பயன்படுத்துதல் 4.5.1 மேற்குறிப்பிட்ட கடன் சீரமைப்பு நடவடிக்கைகள் விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கத்தில் எடுக்கப்படுகின்றன. காப்பீடு இழப்பீட்டுத் தொகை என்பது அவர்களின் நஷ்டத்திற்கு ஈடுகட்ட உதவும். வேளாண்மைக் கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத் துறை வெளியிட்ட உத்தரவின்படி, நடப்பிலிருக்கும் தேசிய விவசாய காப்பீட்டுத் திட்டம் (NAIS), திருத்தப்பட்ட தேசிய விவசாய காப்பீட்டுத் திட்டம் (MNAIS) ஆகிய இரண்டிற்கும் பதிலாக பிரதான் மந்திரி ஃபஸல் பீமா யோசனா திட்டம் (PMFBY) காரிப் 2016 (Kharif 2016) பருவத்திலிருந்து அமல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ், பயிர் சாகுபடி சுழற்சியில் எல்லா நிலைகளிலும் உள்ள பயிர்களுக்கான காப்பீடு அனைத்து விவசாயக் கடன்களுக்கும் அளிக்கப்படும். சில குறிப்பிட்ட நிகழ்வுகளில் அறுவடைக்குப் பின் உள்ள நேரிடர்களும் காப்பீட்டுக்கு உட்படுத்தப்படும். வங்கிகள் விவசாயிகள் குறித்த தகவல்களை www.agri-insurance.gov.in என்ற ஒருங்கிணைக்கப்பட்ட பயிர்க்காப்பீடு வசதிக்காக உள்ள இணையதளத்தில் அளிக்கவேண்டியது அவசியம். இதனால், காப்பீட்டின் கீழ் உள்ள பயிர்களின் மதிப்பீட்டை அளவீடு செய்தல், பிரிமியம் தொகையைக் கழித்தல் போன்றவற்றிற்கு வசதியாக இருக்கும். 4.5.2 இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடன் மறுசீரமைப்பு செய்யும்பொழுது, காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து வரவேண்டிய இழப்பீட்டுத் தொகை ஏதேனும் இருக்குமானால், வங்கிகள் அதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். கடனாளிக்கு ஏதாவது புதிய கடன் கொடுத்திருக்கும்பட்சத்தில், அவை தொடர்பான் சீரமைப்புக் கணக்குகளில் இந்த இழப்பீட்டுத் தொகையையும் சரிசெய்வது அவசியமாகும். இழப்பீட்டுத் தொகையை காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து பெறுவதில் ஓரளவு உறுதிப்பாடு இருக்குமானால், வங்கிகள் அதற்காகக் காத்திராமல், தாமதமின்றி கடனை மறுசீரமைத்து, புதிய கடனையும் கடனாளிக்கு கருணையுடன் வழங்கலாம். 5.1 புதிய கடன்கள் வழங்குதல் 5.1.1 SLBC/DCC-க்கள் கடன் சீரமைப்பு செய்யும் முடிவினை எடுத்தபின், குறுகிய கால கடன்களை மாற்றும் செயல்முறைக்கு காலநேரம் தேவைப்படும் என்பதால், வங்கிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, சாகுபடிப் பரப்பளவுக்கு உரிய பயிருக்கான நிதிநிலை அளவீட்டின் அடிப்படையில், நடப்பிலுள்ள விதிமுறைகளுக்கேற்ப புதிய பயிர்க் கடன்களை வழங்கலாம். 5.1.2 விவசாயம் தொடர்புடைய செயல்பாடுகளுக்காக (கோழிப்பண்ணை, மீன்தொட்டி, கால்நடை வளர்ப்பு இத்யாதி) பல்வேறு நோக்கங்களுக்கான நீண்ட காலக் கடன்கள் தொடர்பாக வங்கிகள் நிதி உதவி அளித்திட நேரிடும். இருப்பிலுள்ள சொத்துக்களை பழுதுபார்த்தல், புதிய சொத்துக்கள் வாங்குதல் போன்றவற்றிற்காக நீண்டகாலக் கடன் உதவிகள் தேவைப்படலாம். இதே போல் இயற்கை சீற்றத்தால், பாதிக்கப்பட்ட பகுதியிலுள்ள கிராமியக் கைவினைஞர், சுயதொழிலர், குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கும் வாழ்வாதாரத்தை தக்கவைத்துக்கொள்ள புதிய கடன் உதவிகள் தேவைப்படலாம். வங்கிகள் இவர்களின் தேவைகளைக் கண்டறிந்து, கணக்கெடுத்து உரிய நடைமுறையைப் பின்பற்றி தேவைப்படும் தொகையைக் கடனாகத் தரலாம். 5.1.3 வங்கிகள் கூடவே பிணையம் ஏதுமின்றி, நடப்பிலுள்ள கடனாளிகளுக்கு, நுகர்வுக் கடனாக ரூ. 10,000 வரை அளிக்கலாம். இருப்பினும் வங்கி தனது விருப்புரிமையைப் பயன்படுத்தி, வரம்பினை ரூ. 10,000-க்கும் அதிகமாக உயர்த்தலாம். 5.2. கட்டளைகள் மற்றும் நிபந்தனைகள் 5.2.1 உத்தரவாதம், பிணையம் மற்றும் விளிம்புத் தொகை 5.2.1.1 தனிநபர் உத்தரவாதம் இல்லையென்ற காரணத்தால் ஒருவருக்குக் கடன் மறுக்கப்படக்கூடாது. ஏற்கனவே, நிலுவையிலுள்ள கடனின் பிணையப் பொருள் (சொத்து) வெள்ளம் போன்றவற்றால், இதர சேதங்களால் பாதிக்கப்பட்டுவிட்டால், கூடுதல் பிணையம் தேவையென்ற காரணத்தைக் கூறி, நிதி உதவி மறுக்கப்படக் கூடாது. தேவைப்படும் பிணைப் பொருளின் மதிப்பு நடப்பிலிருக்கும் பிணையம் மற்றும் புதிய கடனுக்குத் தேவைப்படும் பிணையம் இரண்டையும் சேர்த்து கடன் தொகையைவிடக் குறைவாக இருந்தாலும், புதிய கடன் வழங்கப்படலாம். புதிய கடனைப் பொருத்தவரை, அது கருணையோடு பிரிசீலிக்கப்படவேண்டியது அவசியம். 5.2.1.2 ஏற்கனவே உள்ள பயிர்க்கடன், (காலக் கடனாக மாற்றப்பட்டுள்ள) தனிநபர் உத்தரவாதம் / பயிரின் பிணையம் ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்பட்டு, கடனாளி புதிதாக மாற்றப்பட்ட கடனுக்கு அடமானம் / பிணையமாக நிலம் ஏதும் அளிக்க முடியாதபட்சத்தில், அதை மட்டுமே காரணமாகக் காட்டி, கடனை மாற்றுகின்ற வசதியை மறுக்கக் கூடாது. ஒருவேளை கடனாளி நிலஅடமானம் / பிணையத்தின் பேரில் காலக் கடன் ஏதேனும் வாங்கியிருந்தால், மாற்றப்பட்ட கடனைப் பொறுத்தவரை, இரண்டாம் கட்ட அடமானப் பதிவிலேயே வங்கி திருப்தியடைந்துவிட வேண்டும். கடன் கணக்கை மாற்றும் வசதிக்காக, மூன்றாம் நபர் உத்தரவாதத்தை வங்கி வலியுறுத்தக் கூடாது. 5.2.1.3 நிலத்திற்கான சுவாதீனம், மூலப் பத்திரம் இல்லாதபட்சத்தில், அந்த நிலத்தைப் பிணையமாக அளிக்கவிரும்பினால், வருவாய் துறை அதிகாரிகள் அளிக்கும் சான்றிதழை (உரிமைப் பத்திரம், பதிவு செய்யப்பட்ட பங்காளி சாகுபடியாளர்களுக்கான பத்திரம் தொலைந்து போயிருந்தால்) வங்கிகள் ஏற்றுக்கொள்ளலாம். 5.2.1.4 விளிம்புத் தொகைக்கான தேவை விலக்கிக் கொள்ளப்படலாம். உரிய மாநில அரசு அளிக்கும் கொடை, தள்ளுபடித் தொகையை விளிம்புத் தொகையாகக் கருதலாம். 5.3 வட்டி விகிதம் இந்திய ரிசர்வ் வங்கி அளிக்கும் வழிகாட்டுதல்களின்படி வட்டி விகிதம் நிர்ணயிக்கப்படும். ஆயினும், வங்கிகள் தங்கள் விருப்புரிமை அதிகாரத்திற்குட்பட்டு பேரழிவால் பாதிக்கப்பட்ட இடங்களிலுள்ள மக்களின் துன்பங்களைக் கருணையுடன் பரிசீலித்து, அவர்களுக்கு சில சலுகைகளை வழங்கலாம். நடப்பில் செலுத்தப்படாத தவணைகளுக்கு அபராத வட்டி விதிக்கப்படமாட்டாது. மேலும், சாதாரண வட்டியைக் கூட்டு வட்டியாக்கும் நடைமுறையும் தள்ளிவைக்கப்படவேண்டும். மாற்றப்பட்ட/ மறுசீரமைக்கப்பட்ட கடன்களைப் பொறுத்தவரை, வங்கிகள் அபராத வட்டி ஏதும் விதிக்கக்கூடாது. அவ்வாறு விதித்திருந்தால் அவற்றை தள்ளுபடி செய்யலாம். இயற்கை பேரழிவு நிகழ்ந்த பகுதிகளில், அதன் தன்மை மற்றும் கடுமையைப் பொறுத்து, SLBC/DCC-க்கள் கடனாளிகளுக்கு வங்கிகள் வழங்கக்கூடிய வட்டிவிகித சலுகைகள் பற்றி சீராய்வு செய்யலாம். இதனால், நிவாரணமளிப்பதில் ஒரு சீரான அணுகுமுறையை வங்கிகள் பின்பற்ற முடியும். அத்தியாயம் – VI 6.1 KYC நடைமுறைகளைப் பின்பற்றுவதில் தளர்ச்சி பொதுவாக பேரழிவு நிகழ்ந்த இடங்களில் மோசமாக பாதிக்கப்பட்ட சூழ்நிலையில் இடம்பெயர்ந்தவர்கள் தங்களின் அடையாளம் மற்றும் தனிநபர் சான்றாவணங்களை வைத்திருப்பதோ அவற்றை அணுகுவதோ எளிதான ஒன்றல்ல என்பதை கருத்தில் கொள்ளவேண்டும். இத்தகைய சூழலில், வங்கி அதிகாரி முன்னிலையில் புகைப்படம், கையெழுத்து அல்லது கைநாட்டுடன் சிறிய சேமிப்புக் கணக்கை வங்கிகள் தொடங்கலாம். கணக்கிலுள்ள நிலுவைத் தொகை ரூ. 50,000-க்கு (அல்லது நிவாரணத்தொகை எது அதிகமோ அது எடுத்துக் கொள்ளப்படும்) அதிகமில்லாத கணக்குகளில் அல்லது கணக்கிலுள்ள மொத்த வரவுத்தொகை ரூ.1,00,000-க்கும் (அல்லது நிவாரணத்தொகை எது அதிகமோ அது) அதிகமில்லாத கணக்குகளில் மேற்குறிப்பிட்ட நடைமுறையைப் பின்பற்றலாம். 6.2.1 வங்கிச் சேவையை அணுகுதல் இயற்கை சீற்றத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் வங்கிக் கிளைகள் தற்காலிக இடங்களிலிருந்து செயல்படலாம். இதற்குரிய தகவலை அந்த மண்டலத்திலுள்ள இந்திய ரிசர்வ் வங்கிக்கு அனுப்பிடவேண்டும். 30 நாட்களுக்கும் மேல் தற்காலிக இடங்களில் இருந்து வங்கிகள் செயல்படும்பட்சத்தில், உரிய இந்திய ரிசர்வ் வங்கி மண்டல அலுவலகத்திடம் இதன் பொருட்டு பிரத்யேக அனுமதியைப் பெறவேண்டும். இந்திய ரிசர்வ் வங்கிக்குத் தகவல் அளித்து, வங்கி சேவையை துணை அலுவலகங்கள், நீட்டிக்கபட்ட முகப்புகள், மொபைல் வங்கிச் சேவை ஆகியவற்றின் மூலம் அளிக்கலாம். 6.2.2 பாதிக்கப்பட்ட மக்களின் ரொக்கப்பணத் தேவையை கருத்தில் கொண்டு, அதற்கேற்ப, ஏடிஎம்களை மீட்டெடுத்தல், இதர மாற்று ஏற்பாடுகளை செய்து வாடிக்கையாளர்களுக்கு உதவிடும் செயல்பாடுகளுக்கு வங்கிகள் உரிய முக்கியத்துவம் அளித்திடலாம். 6.2.3 தனது விருப்புரிமை அதிகாரத்தைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்ட மக்களின் துயர் களைய பின்வரும் செயல்பாடுகளை வங்கிகள் தொடங்கலாம் – ஏடிஎம் கட்டணங்களை தள்ளுபடி செய்தல், ஏடிஎம்-ல் பணமெடுக்கும் வரம்பை உயர்த்துதல், ஓவர் டிராப்ட் கட்டணம் / குறித்த கால வைப்பு நிதிகளிலிருந்து முதிர்வுக்கு முன்னரே எடுக்கப்படும் தொகைக்கை அபராதம் / கடன் அட்டையில் காலதாமதத்திற்கான கட்டணம் / காலம் தவறிய கடன் தவணைக் கட்டணம் ஆகியவற்றைத் தள்ளுபடி செய்தல். கடன் அட்டையில் நிலுவையில் இருக்கும் தொகையை 1-2 வருடங்களில் மாதாந்திரத் தவணை முறையில் திருப்பிச் செலுத்தும் வசதியளித்தல். கடனாளிக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பைப் பொறுத்து விவசாயக் கடன் கணக்கில் சாதாரணமாக விதிக்கப்படும் வட்டியைத் தவிர்த்து, பற்று வைக்கப்பட்ட அனைத்துக் கட்டணங்களையும் வங்கிகள் தள்ளுபடி செய்யலாம். அத்தியாயம் – VII கலவரம் மற்றும் இடையூறுகள் – வழிகாட்டுதல்கள் பொருந்தும் தன்மை 7.1 கலவரம் / இடையூறுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புனரமைப்பிற்காக நிதி உதவி அளிக்கும் பொருட்டு வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தும்போது, மேற்குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை பொதுவாக வங்கிகள் பின்பற்றலாம். ஆயினும், கலவரத்தால், உண்மையாக பாதிக்கப்பட்டவர்கள் என்று மாநில அதிகாரிகள் அடையாளங்காட்டுபவர்களுக்கு மட்டுமே வழிகாட்டுதல்களின்படி இந்த நிதியுதவி வழங்கப்படவேண்டும். 7.2 இந்திய ரிசர்வ் வங்கி, மாநில அரசிடமிருந்து தகவல் பெற்று, அதன் அடிப்படையில், வங்கிகளுக்கும் அவைகளிடமிருந்து கிளைகளுக்கும் அறிவுறுத்தல் அனுப்புவதால், கலகத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி கிடைப்பது தாமதமாகிறது. பாதிக்கப்பட்வர்களுக்குத் துரிதமாக நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யும்பொருட்டு, பின்வரும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலகம் நிகழ்ந்தவுடன், அந்த மாவட்ட ஆட்சியர், அந்த பகுதியின் முன்னோடி வங்கி அதிகாரியை மாவட்ட அளவிலான குழுக்களின் DCC கூட்டத்தைக் கூட்டி, தேவைப்பட்டால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சொத்துக்களுக்கும் மக்களுக்கும் ஏற்பட்டுள்ள சேதத்தின் மதிப்பீடு குறித்த அறிக்கையை DCC-க்கு சமர்ப்பிக்க அறிவுறுத்தவேண்டும். கலவரப் பகுதிகளில் பெருத்த அளவில், மக்களுக்கும் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது என்று DCC திருப்தியடைந்துவிட்டால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்கள் மேற்குறிப்பிட்ட வழிகாட்டுதல்களின் அடிப்படையில் வழங்கப்படலாம். மாவட்ட அளவில் DCC இல்லாத பட்சத்தில், மாநில அளவிலான வங்கிகள் குழுமத்தின் SLBC ஒருங்கிணைப்பாளர் மூலம் வங்கிகளின் கூட்டத்தைக் கூட்டி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிப்பது குறித்து முடிவெடுக்க அறிவுறுத்தலாம். மாவட்ட ஆட்சியர் அளிக்கும் அறிக்கை, SLBC/DCC கூட்டங்களில் எடுத்த முடிவுகள், கூட்ட நடவடிக்கைகளில் பதிவு செய்யப்படவேண்டும். இந்திய ரிசர்வ் வங்கியின் உரிய மண்டல அலுவலகத்திற்கு, இந்தக் கூட்டத்தின் நடவடிக்கைக்கான பதிவுகளின் நகல் அனுப்பிவைக்கப்பட வேண்டும். தொகுப்பு வழிகாட்டுதல்கள் – இந்திய ரிசர்வ் வங்கியின் தொகுக்கப்பட்ட சுற்றறிக்கைகளின் பட்டியல்
|