இயற்கையின் பேரழிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வங்கிகள் தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் - ஆர்பிஐ - Reserve Bank of India
இயற்கையின் பேரழிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வங்கிகள் தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள்
இயற்கையின் பேரழிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வங்கிகள் தொடர்ந்து
செயல்படுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள்
இயற்கையின் பேரழிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், துரிதமாக வங்கி செயல்பாடுகளை மீண்டும் தொடங்க அனைத்து பட்டியலிடப்பட்ட வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அறிவுரைகள் வழங்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் தொடர்ந்து தங்களது கணக்குகளை இயக்கவும், பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்கள், அரசு மற்றும் இதர அமைப்புகள் வழங்கும் உதவிகளைப் பெறப் புதிய வங்கிக்கணக்குகளைத் துவங்குவதற்காகவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. மற்ற சேவைகளான, காசோலைப் பரிவர்த்தனை, ரொக்கப் பணம் வழங்கல் போன்றவைகளும் தொடர்ந்து மக்களுக்கு அளிக்கப்படத் தேவையான வழிகாட்டுதல்களையும் அறிவுரைகளில் விளக்கியிருக்கிறோம்.
ரிசர்வ் வங்கி நியமிக்கப்பட்ட உள்ளகச் செயல்பாட்டுக்குழு பேரழிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் வங்கிக் சேவைகளைத் தொடர்ந்திடுதல் சம்பந்தப்பட்ட அனைத்து விபரங்களையும் ஆராய்ந்து அளித்த அறிக்கை/ பரிந்துரையின்பேரில் இந்த அறிவுரைகளும் வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன. ஏற்கனவே அமலில் உள்ள பாதிக்கப்பட்டவருக்கான உதவிகள் வழங்கல் சம்பந்தமான அறிவுரைகளோடு, இந்த வழிகாட்டுதல்களும் அமல் செய்யப்பட வேண்டும். அக்டோபர் 2005இல் 2005-2006 ஆம் ஆண்டிற்கான, இடைக்காலக் கொள்கை அறிவிப்பில் கூறியபடி, ரிசர்வ் வங்கி இந்த உள்ளக செயல்பாட்டுக் குழுவை நியமித்தது.
ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள்படி, பேரழிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், வங்கிக்கிளைகள் பாதிக்கப்பட்டு வழக்கமான செயல்பாட்டை மேற்கொள்ள முடியாதபோது, தற்காலிகமான ஓர் இடத்திலிருந்து, ரிசர்வ் வங்கிக்கு அறிவித்து விட்டுச் செயல்படலாம். பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர் அலுவகங்கள் அல்லது நீட்டிக்கப்பட்ட முகப்புகள் அல்லது நடமாடும் வங்கிக் சேவையகங்கள் போன்றவற்றை அமைத்தும் செயல்படலாம். வாடிக்கையாளர்களின் உடனடிப் பணத்தேவைகளுக்காக அவர்களது நிரந்தர வைப்புகளிலிருந்தும் தண்டனைத்தொகை ஏதுமில்லாமல் வழங்கலாம். தானியங்கிப்பணம் வழங்கு இயந்திரங்களை மீண்டும் செயல்பட வைத்தல் அல்லது அது போன்ற வசதிகளுக்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்வதில் முக்கியத்துவம் கொடுத்துச் செயல்பட வேண்டும். வாடிக்கையாளர்கள், பிற வங்கிகளின் தானியங்கி பணம் வழங்கு இயந்திரங்களுக்கான வலை அமைப்புடன் தொடர்பு கொள்தலை சாத்தியமாக்க முயற்சிகள், நடமாடும் தானியங்கி பணம் வழங்கு இயந்திரங்களை இயக்குதல் போன்றவற்றையும் மேற்கொள்ளலாம். பணப் பெட்டக அளவுகள் உள்ள வங்கிகளின் சேவை பாதிக்கப்பட்டிருந்தால், வங்கிகள் மற்ற கிளைகளில் தற்காலிகக் கருவூலங்களைத் துவக்கியும் செயல்படலாம்.
நிதி உதவிகளை வங்கிகள் அளிக்கும்போது வாடிக்கையாளர்களுக்கு நுகர் கடனாக ரூ.10000/- எவ்வித பிணையமுமின்றி வழங்கலாம். உற்பத்திக் காரியங்களுக்காக, ஏற்கனவே கடன் வாங்கியவர் மட்டுமல்லாமல், தகுதியான அனைத்து கடன் பெறுவோருக்கும் புதிய கடன்களை வழங்கலாம். பேரழிவின் தன்மையையும் அது மீண்டும் வரும் அபாயத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, கடனை திருப்பிச் செலுத்தும் கால அளவு 7 லிருந்து 10 வருடமாகவும், முதல் வருடத்திற்கு திருப்பிச் செலுத்துதல் ஏதும் இல்லாத வகையிலும் அமைந்திருக்கலாம்.
குஜராத், ஆந்திரம், மஹாராஷ்டிரம் ஆகிய மூன்று மாநிலங்களில் ஏற்பட்ட சமீபத்திய வெள்ளப் பெருக்கினால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மீட்பு உதவிகளை அளிக்க மாநில அளவிலான வங்கியாளர் குழுவின் (State Level Bankers Committee) சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுமாறு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
அல்பனா கில்லவாலா
தலைமைப் பொது மேலாளர்
பத்திரிகை வெளியீடு 2006-2007/207