இந்திய ரிசர்வ் வங்கி சுத்தமான பணத்தாள் கொள்கையைக்கடைப்பிடிக்கிறது: அழுக்கடைந்த பணத்தாள்களை விரைவில் பிரித்தெடுக்கும் புதிய இயந்திரங்களை நிறுவியுள்ளது - ஆர்பிஐ - Reserve Bank of India
இந்திய ரிசர்வ் வங்கி சுத்தமான பணத்தாள் கொள்கையைக்கடைப்பிடிக்கிறது: அழுக்கடைந்த பணத்தாள்களை விரைவில் பிரித்தெடுக்கும் புதிய இயந்திரங்களை நிறுவியுள்ளது
இந்திய ரிசர்வ் வங்கி இந்தியக் குடிமக்களுக்காக ‘சுத்தமான பணத்தாள்’ கொள்கையை ஏற்றுக்கொண்டு, நாட்டுக்குரிய இந்தக் குறிக்கோளினை செயல்படுத்துகிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் புதுடில்லி அலுவலகத்தில், பணத்தாள்களைச் சரி பார்க்கும் அதி நவீன (CVPS) இயந்திரங்களைத் தொடங்கி வைக்கும்போது இந்திய ரிசர்வ் வங்கியின் துனை ஆளுநர் திரு வேப காமேசம் இதனைத் தெரிவித்தார். திரு எஸ்.எஸ். கோஹ்லி, தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், பஞ்சாப் நேஷனல் வங்கி, திரு பி.டி.நாரங்க், தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், ஓரியண்டல் வணிக வங்கி, திரு நவீன் குமார், இணைச் செயலர், பணத்தாள்கள் மற்றும் நாணயங்கள் துறை, மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வணிக வங்கிகளின் பிரதிநிதிகள் ஆகியோர் அந்தத் தொடக்கவிழாவில் பங்கேற்றனர். அழுக்கடைந்த மற்றும் சிதைந்த பணத்தாள்களை விரைவில் பிரித்தெடுப்பதற்கு இந்த இயந்திரம் நிறுவப்பட்டது. அந்த இயந்திரம் நிறுவப்பட்ட பத்து ரிசர்வ் வங்கி அலுவலகங்களுள் புது டில்லி ஒன்று.
இந்த இயந்திரம் (CVPS) ஒரு மணி நேரத்தில் 50,000 – 60,000 பணத்தாள்களைச் சரிபார்த்து உரிய செயல் முறைக்கு உட்படுத்த வல்லது. இது அழுக்கடைந்த பணத்தாள்களைத் துணுக்குகளாக்குதல், அவற்றைக் கட்டிகளாக்குதல் ஆகியவற்றைக் கணிப்பொறி இயக்கத்தின் மூலம் செய்வதால், சந்தையிலிருந்து அழுக்கடைந்த பணத்தாள்களை விரைவில் திரும்பப்பெற முடிகிறது. துணுக்குகளாக்கிக் கட்டிகளாக்கும் இந்த முறை, பணத்தாள்களைக் கொளுத்தும்போது ஏற்படும் சுற்றுபுறச் சூழற்கேடு விளைவிக்காத ஒன்றாகும். அது துணுக்குகளாக்கிக் கட்டிகளாக்குவதன் மூலம் அழுக்கடைந்த பணத்தாள்களை அழிக்கிறது. இந்தக் கட்டிகள் வீட்டிலும் அலுவலதத்திலும் பயன்படும் பொருள்களைச் செய்ய உதவும். தொழிற்சாலைகளில் இதனை எரிபொருளாகவும் பயன்படுத்தலாம்.
இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் டாக்டர் பிமல் ஜலான் ஜனவரி 1999இல் சுத்தமான பணத்தாள் கொள்கையினை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சுத்தமான பணத்தாள் கொள்கையைச் செயற்படுத்துவதற்குப் புழக்கத்திலுள்ள அழுக்கடைந்த தாள்களைத் திரும்பப் பெறுதல், புதிய தாள்களைப் புழக்கத்தில் விடுவதைப் போன்றே முக்கியமானது. இந்த இரட்டை இலக்குக் குறிக்கோளை எட்டுவதற்கு ரிசர்வ் வங்கி கடந்த ஓராண்டு காலத்தில் பணத்தாள்கள் நிர்வாகத்திலும், அமைப்புகளிலும் செயல் முறைகளிலும் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கைகள், பணத்தாள்களைச் சரிபார்த்தல், செய்முறைகள், துணுக்குகளாக்குதல், கட்டிகளாக்குதல், அழுக்கடைந்த தாள்களை அழித்தல் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியது.
முதல் கட்டமாக, ரிசர்வ் வங்கி 9 பணம் வழங்கு அலுவலகங்களில் நிறுவுவதற்காக 22 பணத்தாள்கள் சரிபார்த்துச் செயல்படும் அதி நவீன CVPS இயந்திரங்களை வாங்கியது. பெங்களூர், பேலாபூர், சண்டிகார், ஹைதராபாத், ஜெய்பூர், கான்பூர், புதுடில்லி, பாட்னா ஆகிய இடங்களில் இந்த இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. விரைவிலேயே எஞ்சியுள்ள பணம் வழங்கும் அலுவலகங்களிலும், இரண்டாம் கட்ட இயந்திரமயமாக்கலின் கீழ், விரைவில் இந்த அதி நவீன இயந்திரங்கள் நிறுவப்பட உள்ளன. இந்த இயந்திரங்களின் செயல்பாட்டினால் ரிசர்வ் வங்கியின் அழுக்கடைந்த நேட்டுகளை அகற்றும் திறன் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும். அழுக்கடைந்த தாள்களைத் திரும்பப் பெறுதலில் இந்த அதிகரிக்கப்பட்ட திறன் உதவும். அதே நேரத்தில் ரிசர்வ் வங்கியின் பணத்தாள்களை அச்சிடும் 2 அச்சகங்களின் கூடுதல் திறனின் உதவியினால் புதிய பணத்தாள்கள் புழக்கத்தில் விடப்படுவதால், பொதுமக்களிடம் புதிய பணத்தாள்களின் தேவை போதுமான அளவுக்கு நிறை வேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுதிறது.
சுத்தமான பணத்தாள் கொள்கையைச் செயல்படுத்துவதில் ரிசர்வ் வங்கி எடுத்து வரும் மற்ற நடவடிக்கைகள், பணத்தாள்களைத் துளையிட்டு நூலால் தைப்பதும், கம்பியால் ‘பின்’ அடிப்பதும், தடை செய்யப்பட்ட செயல்கள் என அறிவுறுத்தியது. அழுக்கடைந்த தாள்களை ‘பின்’ அடிக்காமல் ரிசர்வ் வங்கியிடம் அளித்தல், ‘பின்’ அடிக்காமல் காகித வளையங்களைப் பயன்படுத்துதல், பொதுமக்களுக்குச் சுத்தமான தாள்களை மட்டுமே வழங்குதல் ஆகியவற்றை பொதுமக்களின் நலன் கருதிச் செய்யவேண்டும் என்று அனைத்து வங்கிகளுக்கும் அறிவுரைகளை வழங்கியுள்ளது. அழுக்கடைந்த தாள்களையும், சிதைந்த தாள்களையும் பொதுமக்களிடமிருந்து பெறுவதற்கும் சில நேரங்களில் ஏற்பாடுகளைச் செய்கிறது. காலமுறையில் நகரங்களில் நாணயங்கள் வழங்குவதற்கு நடமாடும் நாணய வழங்கு வாகனங்கள் அனுப்பப்படுகின்றன. இதன் விளைவாக அழுக்கடைந்த பணத்தாள்கள் புழக்கத்தில் உள்ளன என்ற பொதுமக்களின் குற்றச் சாட்டு கணிசமான அளவில் குறைந்துள்ளது. மேலும் புதிய தாள்களின் புழக்கமும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது.
அல்பனா கிலாவாலா
பொது மேலாளர்
பத்திரிகை வெளியீடு-2001-2002/1220